திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்


திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
x

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி

விமான நிலையம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, ஐதராபாத், புதுடெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முக்கியமற்ற பணிகளில் தற்போது தனியார் நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 16 பேர் பணியமர்த்தப்பட்டு, கடந்த வாரம் முதல் பணியாற்ற தொடங்கி உள்ளனர். மேலும் தற்போது பொங்கல் விடுமுறையை முன்னிட்டு அதிக அளவிலான பயணிகள், விமான சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல்

இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணிக்கு திருச்சி விமான நிலைய முனைய மேலாளர் அறைக்கு ஒரு டெலிபோன் அழைப்பு வந்துள்ளது. பணியில் இருந்த அலுவலர் போனை எடுத்து பேசியபோது, எதிர்முனையில் பேசிய நபர், திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்துவிட்டு உடனடியாக தொடர்பை துண்டித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அலுவலர், இது பற்றி உடனடியாக முனைய மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சோதனை

இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் மூலம் சோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பினை பலப்படுத்தினர்.

மதியம் 2 மணியளவில் தொடங்கிய சோதனை மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில் அங்கு வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

விசாரணை

இதைத்தொடர்ந்து தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து ஏர்போர்ட் போலீசார் மற்றும் விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த தொலைபேசி அழைப்பு வெளிநாட்டு எண்ணில் இருந்தோ அல்லது இணையதளம் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலைய பகுதியில் ெபரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story