தூத்துக்குடி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: முத்துநகர் எக்ஸ்பிரஸ் தாமதமாக புறப்பட்டது
தூத்துக்குடி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் வெள்ளிக்கிழமை முத்துநகர் எக்ஸ்பிரஸ் தாமதமாக புறப்பட்டு சென்றது.
தூத்துக்குடி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீசார் ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். இதனால் முத்துநகர் எக்ஸ்பிரஸ் தாமதமாக புறப்பட்டு சென்றது.
வெடிகுண்டு மிரட்டல்
தூத்துக்குடியில் இருந்து சென்னை, மைசூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று மாலையில் மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம் போல் புறப்பட்டு சென்றது.
அதனை தொடர்ந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன. அப்போது போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி, தூத்துக்குடியில் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு வைத்து விட்டார். இதனை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் ரெயில் நிலையத்துக்கு விரைந்து சென்றனர்.
ரெயில் தாமதம்
தொடர்ந்து ரெயில்வே போலீசாருடன் இணைந்து, ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என்று சோதனை நடத்தினர். ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர்.
அதே நேரத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு வந்தனர். மேலும் மோப்பநாய் மியா வரவரழைக்கப்பட்டு தண்டவாள பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் ரெயில் நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அதே போன்று முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடத்தினர். இந்த சோதனை காரணமாக இரவு 8.15 மணிக்கு புறப்பட வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் 30 நிமிடம் தாமதமாக 8.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
விசாரணை
இதன்பின்னர் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பில் வந்த செல்போன் எண்ணை கொண்டு, மிரட்டல் விடுத்த நபரை பிடிப்பதற்காக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது குரும்பூர் பகுதியில் இருந்து மிரட்டல் அழைப்பு வந்து இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், சுமார் 42 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரெயில் நிலையத்துக்கு மிரட்டல் விடுத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவருடைய பெயர் கணேசமூர்த்தி (வயது 42), சேதுக்குவாய்த்தான் என்ற ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் குடிபோதையில் இருந்தார். தொடர்ந்து பிடிபட்டவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
--------