அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 25 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்-ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம்
தர்மபுரி:
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 25 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
போனஸ்
அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டல ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை தலைவர் அழகிரி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மணி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
கூட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பண்டிகை கால முன் பணம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து தொழிற்சங்கங்களை அழைத்து பேசி 25 சதவீத போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்டிகை கால விடுமுறை, அரசு விடுமுறை நாட்களில் வழங்கி வந்த இரட்டிப்பு ஊதியம் நிறுத்தப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
தொடர் பணி
போக்குவரத்து துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு தொடர் பணி வழங்குவதை நிர்வாகம் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.