சென்னிமலை வட்டார விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு


சென்னிமலை வட்டார விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x

சென்னிமலை வட்டார விசைத்தறி தொழிலாளர்களின் போனஸ் குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை வட்டார விசைத்தறி தொழிலாளர்களின் போனஸ் குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சென்னிமலை வட்டார விசைத்தறி தொழிலாளர்களின் 3 ஆண்டு கால போனஸ் மற்றும் கூலி உயர்வு குறித்த ஒப்பந்தம் இந்த ஆண்டு காலாவதி ஆனதால் புதிதாக போனஸ் மற்றும் கூலி உயர்வு கேட்டு தொழிற்சங்கங்கள் மூலம் விசைத்தறி உரிமையாளர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் இது குறித்த 2 முறை நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் தொழில் சங்கங்கள் வேலை நிறுத்தத்தை நேற்று முன்தினம் முதல் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலையில் மீண்டும் இது குறித்த பேச்சுவார்த்தை விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன். ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க கூட்டு குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேச்சுவார்த்தையில் 3 ஆண்டுக்கான போனஸ் மற்றும் கூலி உயர்வு குறித்து உடன்பாடு ஏற்பட்டது.

கூலி உயர்வு

அதன்படி 2022, 2023 மற்றும் 2024-ம் ஆண்டுக்கு மொத்த கூலியில் இருந்து 8.33 சதவீதம் போனஸ் வழங்குவது என்றும், அதேபோல் 2022-ம் ஆண்டுக்கு தற்போது வாங்கிய கூலியில் இருந்து 4 சதவீத கூலி உயர்வும், 2023-ம் ஆண்டில் 5 சதவீத கூலி உயர்வும், 2024-ம் ஆண்டில் 6 சதவீத கூலியும் உயர்த்தி வழங்குவது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் எம்.பி. சவுந்தர்ராஜன், பொருளாளர் சி.சண்முகம் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளான கே.எஸ்.பி.ராஜேந்திரன், மாரப்பன், ஆறுமுகம், ரவி, நாகப்பன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். சென்னிமலை பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு கடந்த 3 வருடங்களாகவே 8.33 சதவீதம் போனஸ் தான் வழங்கப்பட்டது. இனி வரும் 3 ஆண்டுகளுக்கும் இதே 8.33 சதவீத போனஸ் தொகை தான் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தீபாவளிக்கு பிறகு சென்னிமலை பகுதியில் விசைத்தறிகள் வழக்கம் போல் செயல்படும்.


Next Story