சேலம் மாவட்ட மைய நூலகத்தில் புத்தக கண்காட்சி தொடக்கம்
பள்ளி கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் உலக புத்தக தினவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்ட மைய நூலகத்தில் நேற்று புத்தக கண்காட்சி திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட மைய நூலகத்தின் முதுநிலை நூலகர் சக்திவேல் வரவேற்றார். மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி முன்னிலை வகித்தார். இதில், வாசகர் வட்ட தலைவர் விஜய் ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். மேலும், அவர் சிறுவர்களுக்கான கோடை பயிற்சி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், சேலம் கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் நல்லமுத்து, சிலம்பொலி செல்லப்பனார் தமிழ்க்காப்பு மன்றத்தின் நிறுவனர் மோகன்குமார், மாவட்ட மைய நூலக உறுப்பினர் சொல்லரசர், சென்னிஸ் கல்வி அறக்கட்டளை நிறுவனர் கர்லின் எபி உள்பட பலர் கலந்து கொண்டன. முடிவில், மாவட்ட மைய நூலக இளநிலை நூலகர் அருண்பிரகாஷ் நன்றி கூறினார். இந்த புத்தக கண்காட்சி வருகிற 30-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.