32 அரங்குகளுடன் தொடங்கியது
உடுமலைபுத்தகாலயம், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் ஆகியவற்றின் சார்பில் 9-வது ஆண்டு புத்தகத்திருவிழா உடுமலை தளி சாலையில் உள்ள நகராட்சி திருமணமண்டபம் தேஜஸ் மகாலில் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. இதற்காக பல்வேறு முன்னணி பதிப்பகங்களின் 32 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத்திருவிழா தொடக்க விழாவிற்கு வரவேற்பு குழு தலைவரான எஸ்.எம்.நாகராஜ் தலைமை தாங்கி பேசினார். புத்தகத்திருவிழா கண்காட்சியை நகராட்சி தலைவர் மு.மத்தீன் திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
உடுமலை புத்தகாலயம் சிறப்பு ஆலோசகர் ச.செல்லதுரை, உடுமலை பட்டய கணக்காளர் சங்க முன்னாள் தலைவர் ஆடிட்டர் ஆர்.கந்தசாமி, தேஜஸ் ரோட்டரி சங்கத்தலைவர் பி.சத்யம்பாபு, நூலக வாசகர் வட்ட பொருளாளர் எஸ்.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இதைத்தொடர்ந்து மடத்துக்குளம் எஸ்.வீரமணி தலைமையிலான பகத்சிங் களரி குழுவினரின் சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடந்தது. விழா வரவேற்பு குழு செயலாளர் என்.சக்திவேல் நன்றி கூறினார். புத்தகத்திருவிழா வருகிற 25-ந்தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி தினசரி மாலை சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.