ஆத்தூரில் பயங்கரம்: பொக்லைன் உரிமையாளர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை-வளர்ப்பு மகன் வெறிச்செயல்


ஆத்தூரில் பொக்லைன் உரிமையாளர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது வளர்ப்பு மகனை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

ஆத்தூர்:

பொக்லைன் உரிமையாளர்

சேலம் மாவட்டம் ஆத்தூர் ரெயில் நிலையம் அருகே சக்திநகர் புத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (வயது 48). பொக்லைன் எந்திரத்தை சொந்தமாக வைத்து ஓட்டி வந்தார்.

இவருடைய முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மீனா (45) என்பவரை கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தார். மீனாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விக்னேஷ் (26) என்ற மகன் இருக்கிறார். கிருஷ்ணராஜ், சிறிது வயதில் இருந்தே விக்னேஷை தன்னுடைய வளர்ப்பு மகனாக வளர்த்து வந்தார். இவர்கள் 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

மதுபோதையில் தகராறு

இந்த நிலையில் கிருஷ்ணராஜ் மது அருந்தி விட்டு வந்து மீனாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை விக்னேசும் தட்டிக் கேட்டு வந்துள்ளார். இதனிடையே நேற்று அதிகாலை 2 மணி அளவில் கிருஷ்ணராஜ் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது மீனாவிடம் வழக்கம் போல் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனை விக்னேஷ் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த விக்னேஷ், மீன் வெட்ட பயன்படுத்தப்படும் அரிவாளால் கிருஷ்ணராஜை வெட்டியதாக கூறப்படுகிறது.

வெட்டிக்கொலை

இதை சற்றும் எதிர்பாராத கிருஷ்ணராஜ் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். அங்கிருந்து பக்கத்து வீட்டுக்குள் ஓடியுள்ளார். அப்படி இருந்தும் விக்னேஷ், கிருஷ்ணராஜை ஓட, ஓட விரட்டி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

கிருஷ்ணராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமானார். மீனாவின் கண்முன்னே இந்த சம்பவம் நடந்து முடிந்ததாக தெரிகிறது.

வளர்ப்பு மகன் கைது

இது குறித்து ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் கிருஷ்ணராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தினமும் மது அருந்தி விட்டு வந்து என் தாயிடம் கிருஷ்ணராஜ் தகராறு செய்து வந்தார். இதனை பலமுறை சொல்லியும் அவர் கேட்கவில்லை. எனவே கிருஷ்ணராஜை அரிவாளால் வெட்டி தீர்த்துக் கட்டியதாக போலீசாரிடம் விக்னேஷ் கூறியுள்ளார்.

தந்தையை வளர்ப்பு மகனே வெட்டிக்கொலை செய்த சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story