நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்.2 மாணவர்களுக்கு 25 ஆயிரம் உயர்கல்வி வழிகாட்டி புத்தகம் ஒதுக்கீடு


நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்.2 மாணவர்களுக்கு 25 ஆயிரம் உயர்கல்வி வழிகாட்டி புத்தகம் ஒதுக்கீடு
x

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்.2 மாணவர்களுக்கு 25 ஆயிரம் உயர்கல்வி வழிகாட்டி புத்தகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்

நாமக்கல்:

நான் முதல்வன் திட்டம்

தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டுக்காக கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி 'நான் முதல்வன்' திட்டத்தை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக, அவர்களின் சிறந்த திறமையை கண்டறிய வேண்டும். மாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்றும் மறைந்திருக்கும் திறமை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதாகும்.

இந்த திட்டம் ஆங்கிலம் பேசும் வகுப்புகள், குறியீட்டு முறை, வெளிநாட்டு மொழி வகுப்புகள், பாரம்பரிய தமிழ்நாடு கலாசார வகுப்புகள் மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. தற்போது நான் முதல்வன் திட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்காக உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி வழங்குவதற்கு அந்தந்த மாவட்டங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புத்தகங்களை அனுப்பி வருகிறது.

உயர்கல்வி வழிகாட்டி புத்தகம்

அதன்படி நாமக்கல் மாவட்டத்துக்கு 25 ஆயிரம் உயர்கல்வி வழிகாட்டி புத்தகம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. அவை பணியாளர்கள் மூலம் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டன.

இந்த புத்தகத்தில், நம்மை நாம் புரிந்து கொள்ளுதல், உயர்கல்வி படிப்புகளை புரிந்து கொள்ளுதல், மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டிய திறன்கள், உயர்கல்வியில் சேர்வதற்கான முன் தயாரிப்புகள், வேலை குறித்த கண்ணோட்டம், வேலைவாய்ப்பு தகவல்கள் போன்றவை இடம்பெற்று இருப்பதாகவும், இந்த புத்தகம் விரைவில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story