எல்லை பாதுகாப்பு படை வீரர் 'திடீர்' சாவு
எல்லை பாதுகாப்பு படை வீரர் ‘திடீர்’ சாவு
கொல்லங்கோடு:
கொல்லங்கோடு அருகே அடைக்காகுழி பகுதியை சேர்ந்தவர் கிரன் (வயது 36), எல்லை பாதுகாப்பு படை வீரர். இவருக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி திரிபுராவில் இருந்து விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தார். அதைத்தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை கிரன் மது விருந்துடன் கொண்டாடி மகிழ்ந்தார். நேற்று காலையில் வீட்டின் அறையில் மயங்கி கிடந்தார். இதை கண்ட அவரின் தாயார், உறவினர் உதவியுடன் கிரனை பாறசாலை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். அதைத்தொடர்ந்து கொல்லங்கோடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் கிரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிரன் 'திடீர்' சாவுக்கு காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.