எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சுயமரியாதையை மறந்து கமலாலய வாசலில் காத்துகிடக்கிறார்கள்-உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சுயமரியாதையை மறந்து கமலாலய வாசலில் காத்துக்கிடக்கிறார்கள் என்று சேலத்தில் நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பாக பேசினார்.
இளம்பிள்ளை:
திருமணம்
சேலம் மாவட்டம் நடுவனேரி ஊராட்சி மன்ற தலைவர் முருகன்- விஜயா தம்பதியின் மகனும், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் மணிகண்டனின் தம்பியுமான டாக்டர் பூபதிக்கும், தர்மபுரி மாவட்டம் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் காளியப்பன்- காந்திமதி தம்பதியின் மகள் டாக்டர் அனிதாவுக்கும் அஞ்சகாட்டில் ஜெயமுருகன் இல்லத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.
திருமண விழாவுக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டுதிருமணத்தை நடத்திவைத்தார்.
மிகப்பெரிய வெற்றி
மணமக்களை வாழ்த்தி உதயநிதி ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அமைச்சர் நேரு பொறுப்பு அமைச்சராக இருக்கிறார். அவர் மிகப்பெரிய வெற்றியை பெற்று தருவார். சட்டசபை தேர்தலில் நாம் கோட்டை விட்டு விட்டோம். நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
கலைஞரும், தமிழும் போல மணமக்கள் வாழ வேண்டும். நம்முடைய தலைவரும், அவருடைய உழைப்பும் போல மணமக்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார். நான் மணமக்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.
சுயமரியாதை
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஆட்சியில் இருக்கும் வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருந்தனர். ஆட்சி முடிந்தது. இருவரும் எதிர் எதிர் துருவங்களாக இருக்கின்றனர். சட்டசபையில் அருகருகே அமர்ந்து இருக்கின்றனர். ஆனாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மறுக்கிறார்கள். அவர்கள், சுயமரியாதையை மறந்து கமலாலய வாசலில் புதுடெல்லி சிக்னலுக்காக சுயமரியாதையை மறந்து காத்து கிடக்கிறார்கள்.
ஆனால் மணமக்கள் இருவரும் மருத்துவம் படித்தவர்கள். எந்த காலகட்டத்திலும் சுய மரியாதையை விட்டுக் கொடுக்காதீர்கள். என்ன வேண்டுமோ, அதை கேட்டு ஒரு புரிதலோடு வாழ வேண்டும். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், மற்ற இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழக்கூடியவர். அவரையும் இந்த நேரத்தில் நான் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
ஏராளமானவர்கள் வாழ்த்து
விழாவில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி (மேற்கு), எஸ்.ஆர்.சிவலிங்கம் (கிழக்கு), வக்கீல் ராஜேந்திரன் (மத்திய), எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மேயர் ராமச்சந்திரன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.