பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சிறுவன் கைது
நெல்லை அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
பேட்டை:
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை மேகலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). இவர் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் மாலை சுத்தமல்லி பகுதியில் நடந்த உறவினர் இல்ல நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்க சென்றார். பின்னர் இரவில் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். பேட்டை ரெயில்வே கேட் அருகே வந்தபோது அவர்களை பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் திடீரென்று செல்வராஜ் மனைவியிடம் நகையை பறிக்க முயன்றார். இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் நிலைதடுமாறி கீழே விழுந்தன. எனினும் அந்த பெண் நகையை இறுக பிடித்து கொண்டு கூச்சலிட்டதால், மர்மநபர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன், அந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தினார். விசாரணையில், பெண்ணிடம் நகை பறிக்க முயன்றது சுத்தமல்லி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.