சிறுவன் பலி வாலிபர் படுகாயம்
திருத்துறைப்பூண்டி அருகே டிராக்டரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் சிறுவன் உயிரிழந்தான். வாலிபர் படுகாயமடைந்தார்.
திருத்துறைப்பூண்டி, ஜூன்.2-
திருத்துறைப்பூண்டி அருகே டிராக்டரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் சிறுவன் உயிரிழந்தான். வாலிபர் படுகாயமடைந்தார்.
மோட்டார் சைக்கிளில் சென்றனர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் குமரேசன், (வயது30). விவசாயி. இவர் கொத்தமங்கலம் ஊராட்சி நுணாகாட்டில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு வந்து இருந்தார். நேற்று மாலை 6 மணி அளவில் குமரேசன் மோட்டார் சைக்கிளில் தனது தங்கை மகன் தினேசை(10) அழைத்துக்கொண்டு மேட்டுப்பாளையத்துக்கு வந்தார்.
பரிதாப சாவு
மேட்டுப்பாளையம் மேலத்தெருவில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்து இருந்த சிறுவன் தினேஷ் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேய பரிதாபமாக உயிரிழந்தான். மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற குமரேசன் படுகாயமடைந்தார்.
பிரேத பரிசோதனை
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் சிறுவன் தினேஷ், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த குமரேசன் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த தினேஷ் அருகே உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் நுணாக்காடு பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.