டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி
ஆலங்குளத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது அண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆலங்குளம்:
ஆலங்குளத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது அண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டெங்கு காய்ச்சல்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ராஜீவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கம். கூலி தொழிலாளி. இவருக்கு பர்வீஷ் (வயது 11), பூனிஷ் (9) ஆகிய 2 மகன்கள் உண்டு. அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பர்வீஷ் 6-ம் வகுப்பும், பூனிஷ் 4-ம் வகுப்பும் படித்தனர்.
இந்த நிலையில் பர்வீஷ், பூனிஷ் ஆகிய 2 பேரும் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். உடனே அவர்களை ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். 2 சிறுவர்களின் ரத்த பரிசோதனையில், வெள்ளை அணிக்கள் குறைவாக இருந்ததும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதும் தெரிய வந்தது.
சிறுவன் பலி
இதையடுத்து 2 சிறுவர்களையும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் சிறுவன் பூனிஷ் பரிதாபமாக இறந்தான்.
பர்வீசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த பூனிஷின் உடலைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
சுகாதார பணிகள் தீவிரம்
இதையடுத்து ஆலங்குளம் பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் நேற்று முழு தூய்மை பணியில் ஈடுபட்டனர். வீடு வீடாக சென்று காய்ச்சலால் யாரேனும் பாதிக்கப்பட்டு உள்ளனரா? என பரிசோதனை செய்தனர். பொதுமக்களுக்கு இலவச நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
ஆலங்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஏராளமானவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களை நியமித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.