காவிரி ஆற்றில் மூழ்கிய வாலிபா் பிணமாக மீட்பு
குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கிய வாலிபா் பிணமாக மீட்கப்பட்டார்.
கோவிலுக்கு புறப்பட்டனர்
திருப்பூர் மாவட்டம், கருவம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயபாலன் (வயது 55). இவரது அண்ணண் ஈரோடு அருகே உள்ள மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமதாஸ் (63). இவர்களது 2 குடும்பத்தாரும் தங்களது சொந்த ஊரான திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரத்திற்கு தங்களது தந்தைக்கு திதி கொடுப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்திருந்தனர்.இதையடுத்து மணப்பாறை அருகே வீரப்பூரில் உள்ள பொன்னர் சங்கர் கோவிலுக்கு சாமி கும்பிட திட்டமிட்டு பாலசமுத்திரத்தில் இருந்து நேற்று முன்தினம் வேனில் புறப்பட்டனர். இந்தநிலையில் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் குளித்துவிட்டு கோவிலுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். அப்போது ஜெயபாலனின் மகன்களான அருணாச்சலம் (25), வெங்கடாசலம் (22), ராமதாசின் மகன் ஹரிஷ் (22) ஆகிய 3 பேரும் காவிரி ஆற்றின் சற்று ஆழமான பகுதியில் குளித்துள்ளனர்.
மீட்க முடியவில்லை
அப்போது வெங்கடாசலம் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்த ஹரிஷ் தண்ணீரில் மூழ்கிய வெங்கடாசலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக அருணாச்சலமும் தண்ணீரில் மூழ்கியுள்ளார். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு வீரர்கள், குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அருணாச்சலத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்தநிலையில் தண்ணீரில் மூழ்கி மீட்கப்பட்ட வெங்கடாசலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்தார். இதையடுத்து பல மணி நேரம் அருணாச்சலத்தை தேடியும் கிடைக்கவில்லை.
பிணமாக மீட்பு
இதனைத்தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் தீயணைப்பு வீரர்கள் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்று பகுதியில் தேடுதல் பணி நடந்தது. அப்போது அருணாச்சலம் மூழ்கிய இடத்தில் இருந்து சற்று தொலைவில் அவரது உடல் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் குளித்தலை போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.