ஓமலூர் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு-நண்பருடன் குளித்தபோது பரிதாபம்


ஓமலூர் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு-நண்பருடன் குளித்தபோது பரிதாபம்
x

ஓமலூர் அருகே நண்பருடன் குளித்தபோது கிணற்றில் மூழ்கி வாலிபர் பலியானார்.

சேலம்

ஓமலூர்:

வாலிபர்

ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி மானக்காட்டூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 53). தொழிலாளி. இவருடைய மகன் சிவராஜ் (20). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர், கூலி வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் சிவராஜ், தனது நண்பர் மூர்த்தியுடன் அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்கு குளிக்க சென்றார். அவர்கள் கிணற்றின் மேல் பகுதியில் இருந்து தண்ணீரில் குதித்து, நீச்சல் அடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென சிவராஜிக்கு வலிப்பு ஏற்பட்டது.

தண்ணீரில் மூழ்கி பலி

இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மூர்த்தி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கிய சிவராஜை தேடினர். சில மணி நேரத்துக்கு பிறகு அவர் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தொளசம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர்கள் சிவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே முதல் தகவல் அறிக்கை நகல் வரவில்லை எனக்கூறி, ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிவராஜ் உடல் பிரேத பரிசோதனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

நண்பருடன் குளித்தபோது கிணற்றில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story