வாலிபர், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

கரூரில் நடந்த வெவ்வேறு சம்பவத்தில் வாலிபர், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கரூர்

வாலிபர்

கரூர் தெற்கு காந்திகிராமம் ஈ.பி. காலனி பகுதிக்குட்பட்ட பெரியார் நகர் 2-வது கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் மருதை. இவரது மகன் கார்த்திகேயன் (வயது 25). இவர் சொந்தமாக ஓட்டல் நடத்தி வந்தார். அதில் போதிய வருமானம் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஓட்டல் தொழிலை நிறுத்தி விட்டு ஒரு உணவு நிறுவனத்தில் டெலிவிரி பாயாக வேலை பார்த்து வந்துள்ளார்.

தற்கொலை

இருப்பினும் தனது ஓட்டல் தொழில் நஷ்டம் ஏற்பட்டதை நினைத்து கார்த்திகேயன் மன உளைச்சலில் இருந்துவந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைக்கண்ட அவரது உறவினர்கள் கார்த்திகேயனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்து பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

பெண் சாவு

கரூர் ராயனூர் பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி சித்ரா (30). இவருக்கு கடந்த ஓராண்டாக தீராத வயிற்று வலி இருந்துள்ளது. இதனால் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சித்ரா சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.

இதைக்கண்ட உறவினர்கள் சித்ராவை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story