சேரங்கோடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு
அதிகாரிகள் கலந்துகொள்ளாததால் சேரங்கோடு ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்.
பந்தலூர்,
அதிகாரிகள் கலந்துகொள்ளாததால் சேரங்கோடு ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்.
கூட்டம் புறக்கணிப்பு
பந்தலூர் அருகே அம்மன்காவு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சேரங்கோடு ஊராட்சியின் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஊராட்சி தலைவர் லில்லி ஏலியாஸ் தலைமை தாங்கினார். தாசில்தார் லோகநாதன், துணைதலைவர் சந்திரபோஸ், ஊராட்சி செயலாளர் சஜீத், வருவாய் ஆய்வாளர் விஜயன், ஒன்றிய பொறியாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வனத்துறை, அரசு போக்குவரத்துக்கழகம், நூலகம், மாற்றுதிறனாளிகள் நலத்துறை, டேன்டீ நிர்வாகம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்துகொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படாததால், பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், அவதிப்படுகின்றனர். அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம். அதிகாரிகள் கலந்துகொண்டால் தான் தீர்மானங்கள் நிறைவேற்ற முடியும் என்று கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பந்தலூர் தாசில்தார் நடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை.
அடிப்படை வசதிகள்
இதேபோல் கறிக்குற்றி அரசு தொடக்க பள்ளியில் நெலாக்கோட்டை ஊராட்சியின் கிராம சபை கூட்டம் தலைவர் டெர்மிளா பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நெடுகுளா ஊராட்சி சார்பில் கேர்கம்பை அரசு பள்ளி வளாகத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் சுகுணா சிவா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜக்கனாரை ஊராட்சியில், ஊராட்சி தலைவர் சுமதி சுரேஷ் தலைமையில் நடந்த கிரா மசபை கூட்டத்தில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். நடுஹட்டி ஊராட்சியில் தலைவர் அரக்கம்பை கிருஷ்ணன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கெங்கரை ஊராட்சியில் தலைவர் முருகன், கோடநாடு ஊராட்சியில் தலைவர் சுப்பி காரி, தேனாடு ஊராட்சியில் தலைவர் ஆல்வின், குஞ்சப்பணை ஊராட்சியில் தலைவர் இம்மானுவேல் மணிகண்டன், கொணவக்கரை ஊராட்சியில் தலைவர் ஹரிபிரியா ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.