மார்த்தாண்டம் அருகே தற்கொலை செய்த சிறுமியின் காதலன் கைது


மார்த்தாண்டம் அருகே தற்கொலை செய்த சிறுமியின் காதலன் கைது
x

மார்த்தாண்டம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்த சிறுமியின் காதலனை போலீசார் கைது செய்தனர்

கன்னியாகுமரி

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்த சிறுமியின் காதலனை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

16 வயது சிறுமியுடன் காதல்

மார்த்தாண்டம் அருகே குழித்துறை களுவன்திட்டை காலனியை சேர்ந்தவர் ரதீஷ் குமார். இவருடைய மனைவி ஸ்ரீசுமா. இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு. ரதீஷ்குமார் பிரிந்து சென்ற நிலையில் சுமா தனது 2 மகள்களுடன் மார்த்தாண்டம் வடக்குத்தெருவில் வசித்து வந்தார்.

ஸ்ரீசுமாவின் இளைய மகள் அக்‌ஷயா (வயது 16) 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு, செண்டை மேளம் இசைக்க சென்றார். இந்த நிலையில் அவர் தன்னுடன் செண்டை மேளம் இசைக்க வந்த சுங்கான்கடை எஸ்.ஏ. தெருவை சேர்ந்த சஜின் (24) என்பவரை காதலித்து வந்தார். இவர்களின் காதல் இருவர் வீட்டுக்கும் தெரிய வந்தது. அவர்கள் அக் ஷயாவுக்கு 18 வயது நிரம்பிய பின் திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்தனர்.

தற்கொலை

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சஜின் அக்‌ஷயாவின் வீட்டிற்கு சென்று கோவிலுக்கு செல்ல அழைத்துள்ளார் ஆனால் அதற்கு அக் ஷயா வர மறுப்பு தெரிவித்ததாகவும், அதைத் தொடர்ந்து சஜின் அங்கிருந்து சென்று விட்டார்.

பின்னர் அக்‌ஷயா போனில் தொடர்பு கொண்டு சஜினுடன் கோவிலுக்கு தான் வருவதாக கூறியுள்ளார். அதன் பிறகு அக்‌ஷயா வீட்டில் உள்ள அறைக்கு சென்று விஷத்தை குடித்தார். இதனால் மயங்கி விழுந்த அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தும் பலனின்றி அக் ஷயா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

காதலன் கைது

இந்த நிலையில் அக்‌ஷயாவின் தாய் ஸ்ரீசுமா மார்த்தாண்டம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், 'கடந்த 20-ந் தேதி மாலை சஜின் போனில் தன்னை தொடர்பு கொண்டு தகாத வார்த்தை பேசி, மிரட்டினார்' என குறிப்பிட்டு இருந்தார்.

அதன்பேரில் மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் விசாரணை நடத்தி மார்த்தாண்டத்தில் சஜினை கைது செய்தார்.


Next Story