கால்பந்து பயிற்சி பெற சிறுவர்கள் ஆர்வம்
கோத்தகிரி காந்தி மைதானத்தில் கால்பந்து பயிற்சி பெற சிறுவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் கால்பந்து விளையாட்டு பிரபலமாகி வருகிறது. கோத்தகிரி நகரின் மைய பகுதியில் காந்தி மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி வருவதுடன், விளையாட்டு இட ஒதுக்கீட்டில் தேர்வாகி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. அந்த போட்டிகளை கண்டு களிக்கும் வீரர்கள் இடையே கால்பந்து ஜூரம் ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் கோத்தகிரி காந்தி மைதானத்தில், சிறுவர்கள் ஆர்வத்துடன் கால்பந்து விளையாடி வருகின்றனர். தகுதி பெற்ற பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெறவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். காலை 6 மணி முதல் 8 மணி வரை ஏராளமான இளைஞர்களும் கால்பந்து விளையாடி வருகின்றனர். இதனால் கோத்தகிரி காந்தி மைதானம் வீரர்களால் களைகட்டி காணப்படுகிறது.