தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பிரம்மசக்தி தேர்வு
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக தி.மு.க.வை சேர்ந்த பிரம்மசக்தி தேர்வு செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக தி.மு.க.வை சேர்ந்த பிரம்மசக்தி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.
மாவட்ட பஞ்சாயத்து
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடத்தப்பட்டது. 17 உறுப்பினர்களை கொண்ட மாவட்ட பஞ்சாயத்தில் அ.தி.மு.க. 12 வார்டு உறுப்பினர்களையும், தி.மு.க. 5 வார்டு உறுப்பினர்களையும் பெற்றது. தொடர்ந்து நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த 5-வது வார்டு உறுப்பினர் சத்யா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த மே மாதம் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அந்த தீர்மானத்தை நிறைவேற்றினர். இதனை எதிர்த்து தலைவர் சத்யா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அப்போது ஐகோர்ட்டு, நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் 15 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அதன் பேரில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தலைவராக இருந்த சத்யா நீக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.
தேர்தல்
இதனை தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தலை அறிவித்தது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண மறைமுக தேர்தல்களின் போதும், அதன்பின்னர் நடந்த சாதாரண, தற்செயல் மறைமுக தேர்தல்களின் போதும் குறைவெண் வரம்பின்மை மற்றும் கோர்ட்டு வழக்கு போன்ற காரணங்களால் தேர்தல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட பதவியிடங்களுக்கும், இறப்பு, பதவி விலகல், பதவி நீக்கம் காரணமாக செப்டம்பர் மாதம் வரை ஏற்பட்டு உள்ள காலி பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 30-ந் தேதிக்குள் தொடர்புடைய உறுப்பினர்களுக்கு மறைமுக தேர்தலுக்கான தேர்தல் அறிவிக்கை தெரிவிக்கப்பட்டது.
நேற்று காலை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. காலை 10.30 மணிக்கு மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கூட்ட அரங்குக்கு வந்தனர். 10.45 மணி அளவில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் தேர்தல் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். அப்போது, தி.மு.க. தரப்பில் 15-வது வார்டு உறுப்பினர் பிரம்மசக்தி உமரிசங்கர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை 10-வது வார்டு உறுப்பினர் செல்வக்குமார் முன்மொழிந்தார். 7-வது வார்டு உறுப்பினர் சந்திரசேகர் வழிமொழிந்தார். தொடர்ந்து வேறு யாரேனும் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்களா என்று அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் யாரும் மனு தாக்கல் செய்யாததால் பிரம்மசக்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
வாழ்த்து
இதனை தொடர்ந்து மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கோப்புகளில் கையெழுத்திட்டார். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதன்பிறகு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பூங்கொத்து, சால்வை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மாவட்ட பஞ்சாயத்து தலைவராக தி.மு.க.வை சேர்ந்த பிரம்மசக்தி தேர்வு செய்யப்பட்டதால், மேள தாளங்கள் முழங்க உற்சாகத்துடன் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன. இதனால் அ.தி.மு.க. வசம் இருந்த மாவட்ட பஞ்சாயத்து, தி.மு.க.வின் வசமானது.