சிறுவனின் மூளை புற்றுநோய் கட்டியை அகற்றி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை
மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவனுக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அதிநவீன கதிர்வீச்சு கருவிகள் மூலம் டாக்டர்கள் சிகிச்சை அளித்து குணப்படுத்தினர். 15 நிமிட சிகிச்சையிலேயே புற்றுநோய் கட்டியை துல்லியமாக அழித்து சாதனை படைத்த டாக்டர்களுக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் பாராட்டு தெரிவித்தார்.
மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவனுக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அதிநவீன கதிர்வீச்சு கருவிகள் மூலம் டாக்டர்கள் சிகிச்சை அளித்து குணப்படுத்தினர். 15 நிமிட சிகிச்சையிலேயே புற்றுநோய் கட்டியை துல்லியமாக அழித்து சாதனை படைத்த டாக்டர்களுக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் பாராட்டு தெரிவித்தார்.
மூளையில் புற்றுநோய்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆயுதக்களம் பகுதியை சேர்ந்தவர் பிரசாத். பொக்லின் டிரைவர். இவருடைய மகன் தசரதன் (வயது4). இவனுக்கு மூளை அருகே புற்று நோய் கட்டி இருப்பது கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த பிப்ரவரி மாதம் சேர்த்தனர்.
அங்கு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் மூளை அருகே இருந்த புற்று நோய் கட்டி முற்றிலும் அகற்றப்படவில்லை. இதையடுத்து அந்த சிறுவன் கடந்த வாரம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்ததில் புற்றுநோய் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதிநவீன கதிர்வீச்சு கருவி
இதையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் உதவி பேராசிரியர்கள் அனிதாகுமாரி, அருண், சக்திபிரியா, செல்வகுமார், ராஜகோபாலன் ஆகியோர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் ஆலோசனை செய்து சிறுவனுக்கு அதிநவீன கதிர்வீச்சு கருவி மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றுவது என முடிவு செய்தனர். அதன்படி தினமும் 3 நிமிட கதிர்வீச்சு சிகிச்சை முறையில் 5 நாட்களில் மொத்தம் 15 நிமிடங்கள் மட்டுமே கதிர்வீச்சு சிகிச்சை அளித்து புற்று நோய் கட்டியை அழித்தனர்.
இந்த சிகிச்சை முறை மிகவும் துல்லியமாக புற்று நோய் கட்டிகளை அழிக்க கூடியதாகும். முதல்- அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலம் இந்த சிகிச்சை சிறுவனுக்கு இலவசமாக செய்யப்பட்டது. தற்போது சிறுவன் குணமடைந்து வருகிறான். இதையடுத்து சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழுவினரை மருத்துவக்கல்லூரி முதல்வர் டீன் பாலாஜிநாதன் பாராட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரூ.25 கோடியில் கருவி
தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ரூ.25 கோடி மதிப்பலான புற்று நோய் கருவிகள் கதிர்வீச்சு துறையில் நிறுவப்பட்டுள்ளது. இதில் கதிர்வீச்சு மூலம் புற்று நோயை துல்லியமாக கண்டறிந்து அழிக்கும் சிகிச்சை 4 வயது சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூளையில் இருந்த புற்று நோய் கட்டியால் கண், இதயம், நுரையீரல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்படாத வகையில் இந்த சிகிச்சை செய்யப்பட்டது.
இதனை டாக்டர்கள், இயற்பியலாளர்கள், மிக துல்லியமாக கண்டறிந்து கணினி முறையில் சிகிச்சை அளித்துள்ளனர். இந்த சிகிச்சையை தனியார் ஆஸ்பத்திரிகளில் மேற்கொண்டால் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவு ஆகும். தஞ்சை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த புற்று நோயாளிகள் இந்த அதிநவீன சிகிச்சை முறையை பயன்படுத்திக்கொள்ளலாம்..
இவ்வாறு அவர் கூறினார்.