தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்


தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்
x

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதன்முறையாக மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது. அவருடைய உறுப்புகள் சென்னை, மதுரை ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க ஆண் கடந்த 3-ந் தேதி சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அவருக்கு மூளை செயலிழப்பு ஏற்பட்டு மூளை சாவு அடைந்தது தெரிய வந்தது.

இது குறித்து டாக்டர்கள், அவருடைய குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என முடிவு செய்து டாக்டர்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகம், இதய வால்வுகள், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை எடுத்து 5 பேருக்கு தானமாக அளித்தனர்.

முதன்முறையாக.....

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதன்முறையாக மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

இதில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு பொருத்தப்பட்டது. இதய வால்வுகள் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சாலை வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கல்லீரல் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story