சொத்து தகராறில் அண்ணன் வெறிச்செயல்அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியருக்கு அரிவாள் வெட்டுதடுக்க முயன்ற 3 மாணவர்களுக்கும் காயம்


சொத்து தகராறில் அண்ணன் வெறிச்செயல்அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியருக்கு அரிவாள் வெட்டுதடுக்க முயன்ற 3 மாணவர்களுக்கும் காயம்
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே சொத்து தகராறில் அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை அண்ணன் அரிவாளால் வெட்டினார். இதை தடுக்க வந்த 3 மாணவர்களும் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம்


விழுப்புரம் அடுத்த கோலியனூரில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதற்காக பள்ளி அருகே தங்கியிருந்து, தினசரி பள்ளிக்கு வந்து செல்வார்.

இந்த நிலையில், இவருக்கும் இவரது அண்ணன் ஸ்டாலின் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது. நேற்று காலை வழக்கம் போல் நடராஜன் பள்ளிக்கு வந்திருந்தார். அப்போது, மதிய உணவு இடைவேளையின் போது, பள்ளி வளாகத்தில் நடராஜன் நின்று கொண்டிருந்தார்.

பள்ளிக்குள் புகுந்து அரிவாள் வெட்டு

அந்த சமயத்தில், மோட்டார் சைக்கிளில் ஸ்டாலின் அங்கு வந்தார். திடீரென அவர், நடராஜனின் முதுகு பகுதியில் குத்தி தாக்கினார். பின்னர், தான் எடுத்து வந்திருந்த அரிவாளால் ஆசிரியரின் வலது கையில் வெட்டினார். அதேபோன்று, முதுகு பகுதியிலும் வெட்டுகள் விழுந்தது. இதில் படுகாயமடைந்த நடராஜன் என்ன செய்வது என்று தெரியாமல் கூச்சலிட்டார். இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும் ஆசிரியரின் இக்கட்டான நிலையை பார்த்த மாணவர்கள் சிலர் ஸ்டாலினை பிடித்து தடுக்க முயன்றனர். அப்போது, அவர்களையும் ஸ்டாலின் தாக்கினார். இதில் பிளஸ்-1 படிக்கும் மாணவர்கள் மனோஜ், ஆகாஷ், முருகன் ஆகியோருக்கு கைகளில் அரிவாள் வெட்டு விழுந்தது.

சுற்றிவளைத்த மாணவர்கள்

இருப்பினும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஸ்டாலினை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஸ்டாலினை பிடித்து, அரிவாளை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, ஆசிரியர் நடராஜனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இதேபோல் காயமடைந்த 3 மாணவர்களும் ஆஸ்பத்திரியில் உரிய சிகிச்சை பெற்றனர்.

கொலை செய்ய திட்டம்

இதற்கிடையே பள்ளி வளாகத்துக்குள் புகுந்து வெறிச்செயலில் ஈடுபட்ட ஸ்டாலினை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சொத்து பிரச்சினையில் தம்பியை கொலை செய்ய திட்டமிட்டு வந்ததாக ஸ்டாலின் வாக்கு மூலம் அளித்து உள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஸ்டாலினை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story