டாஸ்மாக் விற்பனையாளரின் வீட்டின் கதவைஉடைத்து 12¾ பவுன் நகை கொள்ளை
தூத்துக்குடி அருகே டாஸ்மாக் விற்பனையாளரின் வீட்டின் கதவைஉடைத்து 12¾ பவுன் நகை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி அருகே பூட்டிய வீட்டில் 12¾ பவுன் தங்க நகைகளை துணிகரமாக கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
டாஸ்மாக் விற்பனையாளர்
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அய்யனார் காலனியை சேர்ந்தவர் பெரியநாயகம் (வயது 48). இவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 23-ந் தேதி மனைவிக்கு முதுகு வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக வீட்டை பூட்டிவிட்டு தஞ்சைக்கு சென்று விட்டாராம். இந்த நிலையில் பெரியநாயகத்தின் வீட்டில் போடப்பட்டு இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக, பெரியநாயகத்துக்கு தகவல் கிடைத்தது.
ரூ.3¾ லட்சம்
அதன்பேரில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார். அங்கு வீட்டின் முன்பக்க கதவும், பெட்ரூம் கதவும் உடைக்கப்பட்டு இருந்தது. அங்கு இருந்த பீரோ சாவியை எடுத்த மர்மநபர் பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.3 லட்சத்து 82 ஆயிரம் மதிப்புள்ள தங்க சங்கிலி, மோதிரம், கம்மல், தங்க நாணயம் உள்பட 12¾ பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.