வீட்டை உடைத்து காட்டுயானை அட்டகாசம்


வீட்டை உடைத்து காட்டுயானை அட்டகாசம்
x

கோத்தகிரி அருகே வீட்டை உடைத்து காட்டுயானை அட்டகாசம் செய்தது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே வீட்டை உடைத்து காட்டுயானை அட்டகாசம் செய்தது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

காட்டுயானைகள் நடமாட்டம்

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானைகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீடுகளை விட்டு வெளியே வரவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் தங்களது அன்றாட வேலைகளை கவனிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள காக்கா கூண்டு அறையூர்மட்டம் கிராமத்தில் சுமார் 15 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளது.

வீட்டை உடைத்தது

இதற்கிடையில் நேற்று இரவில் அந்த கிராமத்துக்குள் காட்டுயானை ஒன்று புகுந்தது. தொடர்ந்து மருதாசலம் என்ற கூலித்தொழிலாளியின் வீட்டுச்சுவர் மற்றும் மேற்கூரையை உடைத்து சேதப்படுத்தியது.

அப்போது வீட்டில் தூங்கி கொண்டு இருந்த மருதாசலம் அலறியடித்து எழுந்தார். தொடர்ந்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது, காட்டுயானை வீட்டை சேதப்படுத்தி கொண்டு இருப்பது தெரியவந்தது.

விரட்டியடிப்பு

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், பின்புற வாசல் வழியாக வீட்டை விட்டு வெளியே ஓடினார். இதனால் காட்டுயானையின் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார். தொடர்ந்து பாதுகாப்பான இடத்துக்கு சென்ற அவர், அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து கிராம மக்கள் இணைந்து தீப்பந்தங்களை ஏந்திக்கொண்டு காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் கழித்து காட்டுயானை அடர்ந்த வனப்பகுதிக்கள் சென்றது. பின்னர் வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து சென்ற அவர்கள் சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டனர்.

மேலும் மீண்டும் காட்டுயானை ஊருக்குள் வராமல் தடுக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டுயானையால் அந்த கிராம மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.


Next Story