கிளினிக்கின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
விழுப்புரத்தில் கிளினிக்கின் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். மேலும் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை கடையிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் எதிரில் தனியார் கிளினிக் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் நோயாளிகளுக்கு சிகிச்சை முடிந்ததும் அந்த கிளினிக்கை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை 9 மணியளவில் அதன் உரிமையாளர் விழுப்புரம் முத்தோப்பு பகுதியை சேர்ந்த கவிதா என்பவர், அந்த கிளினிக்கிற்கு வந்தபோது கண்ணாடி கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.9,500 ரொக்கம் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், அந்த கிளினிக்கின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதேபோல் அதே பகுதியில் சிறுவர்கள், இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டையும் மர்ம நபர்கள் உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த சமயத்தில் ஆள்நடமாட்டம் இருந்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதனால் அந்த கடையில் இருந்த பொருட்கள் கொள்ளைபோகாமல் தப்பியது.
இதுகுறித்த புகார்களின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.