கோவில் உண்டியலை உடைத்து பணம்-வெள்ளி நகை கொள்ளை


கயத்தாறில் கோவில் உண்டியலை உடைத்து பணம்- வெள்ளி நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கண்காணிப்பு கேமராவில் சிக்கிய அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறில் கோவில் உண்டியலை உடைத்து பணம்- வெள்ளி நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கண்காணிப்பு கேமராவில் சிக்கிய அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவில் உண்டியலை உடைத்து...

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அரசன்குளம் நாற்கர சாலையில் காந்தாரி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் கோவிலை நிர்வாகிகள் பூட்டி சென்றனர்.

பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த 3 மர்மநபர்கள், கோவில் வளாகத்தில் இருந்த 2 சில்வர் உண்டியல்களை கடப்பாரை கம்பியால் நெம்பி உடைத்து திறந்து, அதில் இருந்த பணத்தை திருடினர். தொடர்ந்து கோவில் இரும்பு கதவை உடைத்து திறந்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த மற்றொரு சில்வர் உண்டியலையும் உடைத்து திறந்து, அதில் இருந்த பணத்தை திருடினர்.

வெள்ளி பொருட்கள் கொள்ளை

மேலும் கோவிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் 21 வெள்ளி காப்புகள் உள்ளிட்ட நகைகளையும், 20 பித்தளை திருநீறு கொப்பறைகள் போன்றவற்றையும் கொள்ளையடித்து சென்றனர். நேற்று காலையில் கோவிலுக்கு சென்ற பக்தர்கள், கோவிலில் இரும்பு கதவு மற்றும் உண்டியல்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கும், கயத்தாறு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் 3 மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியல்களை உடைத்து, பணம்-வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றது பதிவாகி இருந்தது.

மேலும் கோவிலில் சமீபத்தில்தான் கொடை விழா நடந்தது. எனவே உண்டியலில் பக்தர்கள் அதிகளவு காணிக்கை செலுத்தியதை அறிந்த மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story