ஓடுகளை பிரித்து வீட்டுக்குள் குதித்து பணம் கொள்ளை


ஓடுகளை பிரித்து வீட்டுக்குள் குதித்து பணம் கொள்ளை
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே ஓடுகளை பிரித்து வீட்டுக்குள் குதித்து பணத்தை கொள்ளையடித்த 2 பேர், பெண்ணையும் தாக்கி நகையை பறித்துச்சென்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள வடவாம்பலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மனைவி விஜயலட்சுமி (வயது 55). இவரும் அவரது மகன் அரிராமனும் (26) நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.அந்த சமயத்தில் நள்ளிரவு 1 மணியளவில் மர்ம நபர்கள் 2 பேர், விஜயலட்சுமி வீட்டின் பின்பக்கத்தில் உள்ள ஓடுகளை பிரித்து உள்ளே குதித்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை கள்ளச்சாவி மூலம் நைசாக திறந்து அதில் வைத்திருந்த ரூ.95 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு பின்பக்கம் வழியாக செல்ல முயன்றனர்.

நகை பறிப்பு

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி, கூச்சலிட முயன்றார். அதற்குள் அந்த மர்ம நபர்கள் இருவரும், விஜயலட்சுமியின் வாயை கையால் பொத்திக்கொண்டதோடு அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியையும் பறித்துக்கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த சத்தம் கேட்டு அரிராமன் எழுந்து வந்து திருடன்... திருடன்... என கூச்சலிட்டபடி அவர்கள் இருவரையும் துரத்திச்சென்றார். அதற்குள் அந்த மர்ம நபர்கள் இருவரும், வீட்டின் பின்பக்கம் வழியாக தப்பிச்சென்று விட்டனர். அரிராமனின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் யாரும் வெளியே வரவில்லை. அந்த மர்ம நபர்கள் இருவரும் கொள்ளையடிக்கும்போது யாரேனும் பார்த்துவிட்டு துரத்தும்போது அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் யாரிடமும் சிக்கி விடக்கூடாது என்பதற்காக விஜயலட்சுமி வீட்டின் பக்கத்தில் இருக்கும் வீடுகளின் முன்பக்க கதவை வெளியே தாழ்பாள் போட்டுவிட்டு கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.2¼ லட்சமாகும்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து விஜயலட்சுமி, வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற மர்ம நபர்கள் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story