அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்
பாலக்கோடு ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 6,400 மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.
பாலக்கோடு:
பாலக்கோடு ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 6,400 மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.
காலை உணவு
பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 111 அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 6,400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா நடந்தது. பாலக்கோடு தெற்கு ஊராட்சி ஒன்றிய அண்ணா தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு செந்தில்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்ரமணி, பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி குழந்தைகளுக்கு காலை உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சூடாக சமைத்த, சத்தான, சுவையான காலை உணவு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ஊராட்சி தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், பிரதிநிதி மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஆகியோரை கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியம்
பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 111 அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு திங்கட்கிழமை காய்கறி சாம்பாருடன் கோதுமை ரவா உப்புமாவும், செவ்வாய்க்கிழமை ராகி புட்டு, தேங்காய் மற்றும் (நாட்டு) சர்க்கரையும், புதன்கிழமை காய்கறி சாம்பாருடன் வெண்பொங்கலும், வியாழக்கிழமை காய்கறி சாம்பாருடன் அரிசி உப்புமாவும், வெள்ளிக்கிழமை ரவா கேசரி மற்றும் ரவா காய்கறி கிச்சடியும் அனைத்து பள்ளி வேலைநாட்களுக்கும் வழங்கப்படும்.
அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளதால் அவர்களின் ஆரோக்கியம், நல்ல வளர்ச்சி, சிறந்த அறிவாற்றல் உள்ளிட்ட அனைத்தும் சிறப்பாக இருக்கும். குழந்தைகளும் காலை உணவை தவறாமல் எடுத்து கொள்வதால் சோர்வின்றி கல்வி பயில இத்திட்டம் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட அரசு வக்கீல் பி.கே.முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குனர் பாபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிமேகலை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ரவி, பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, தாசில்தார் ராஜசேகரன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுஜாதா, ஒன்றியக்குழு துணை தலைவர் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.