அரசு தொடக்கப்பள்ளிக்கூடங்களில் காலை உணவு: பெற்றோர், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி


அரசு தொடக்கப்பள்ளிக்கூடங்களில் காலை உணவு:  பெற்றோர், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி
x

அரசு தொடக்கப்பள்ளிக்கூடங்களில் காலை உணவு வழங்கியதை தொடர்ந்து பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு

அரசு தொடக்கப்பள்ளிக்கூடங்களில் காலை உணவு வழங்கியதை தொடர்ந்து பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காலை உணவு

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிக்கூடங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு என்கிற திட்டத்தை அறிவித்து கடந்த 15-ந் தேதி மதுரையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சியில் 26, தாளவாடி மலைப்பகுதியில் 38 என 64 அரசு தொடக்கப்பள்ளிக்கூடங்களில் 1முதல் 5-ம் வகுப்பு வரையான 3 ஆயிரத்து 291 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இது பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகிழ்ச்சி

இதுகுறித்து தாளவாடி மலை திகனாரை கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி என்பவருடைய மனைவி அன்பரசி என்பவர் கூறும்போது, ' தினக்கூலி செய்து எங்கள் குடும்பத்தை ஓட்டி வருகிறோம். எனக்கு 3 குழந்தைகள். 3 பேரும் படித்து வருகிறார்கள். எங்களை போன்றவர்கள் பெரும்பாலும், குழந்தைகளுக்கு காலையில் சாப்பாடு வழங்குவது என்பது சிரமமான விஷயம். இதை மனதில் கொண்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கூட குழந்தைகளுக்கு காலைஉணவு வழங்கி இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இனிமேல், காலையில் குழந்தைகளின் உணவு பற்றிய கவலை எங்களுக்கு இல்லை' என்றார்.

ஈரோடு கொல்லம்பாளையம் அரசு பள்ளிக்கூட ஆசிரியை மேனகா கூறும்போது, 'எங்கள் பள்ளிக்கூடத்துக்கு வரும் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர் கூலி வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் குடும்பங்களில் இரவில் வடித்த சாதம்தான் காலையிலும் உணவு. குழந்தைகளின் இந்த சிரமத்தை புரிந்துகொண்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த திட்டமாக காலை உணவு வழங்கி இருப்பது மகிழ்ச்சிக்கு உரியது' என்றார்.

ஊட்டச்சத்து

இதே பள்ளிக்கூட 5-ம் வகுப்பு மாணவி சுபாஷினி கூறும்போது, 'நான் பெரும்பாலும் காலை உணவு சாப்பிடாமல்தான் பள்ளிக்கூடம் வருவேன். அதை யாரிடமும் சொல்ல முடியாது. பசி இருந்தால் பாடத்தையும் கவனிக்க முடியாது. இனிமேல் எனக்கு அந்த கவலை இல்லை. தினமும் காலை உணவு எங்கள் பள்ளியிலேயே கிடைக்கும். தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி' என்றார்.

இந்த திட்டம் குறித்து குழந்தைகள் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் அருண்குமார் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் சத்துணவு மூலம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து 30 முதல் 40 சதவீதம் வரை கிடைக்கிறது. காலை உணவை பெரும்பாலான குழந்தைகள் தவிர்ப்பதை மனதில்கொண்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. சத்தான உணவுகள் வழங்கப்படுவதால், 80 சதவீதம் ஊட்டச்சத்துக்கு குழந்தைகளுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story