புதுப்பாலப்பட்டு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்


புதுப்பாலப்பட்டு அரசு பள்ளியில் படிக்கும்    மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்    கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பாலப்பட்டு அரசு பள்ளியி்ல் படிக்கும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை கலெக்டர் ஷ்ரவன் குமார், உதயசூரியன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஒன்றியம் புதுப்பாலப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நேற்று காலை நடந்தது. விழாவில் கலெக்டர் ஷ்ரவன் குமார், சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. உதயசூரியன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர். அதன்பிறகு கலெக்டர் ஷ்ரவன் குமார் கூறியதாவது:-

937 மாணவா்கள் பயன்பெறுவார்கள்

அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததோடு, இத்திட்டத்தை மதுரையில் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பாலப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை வட்டத்திற்குட்பட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 15 அரசு தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் 937 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி, கல்வராயன்மலை ஒன்றியக்குழு தலைவர் சந்திரன், கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாச்சாபீ ஜாகீர் உசேன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலமேலு சின்னத்தம்பி, புதுப்பாலப்பட்டு ஊராட்சிமன்ற தலைவர் சாரதா சின்னையன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், வேங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி கிருஷ்ணன் உள்பட பள்ளி தலைமையாசிரியர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story