620 தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம்


620 தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் கல்வி ஆண்டில் 620 தொடக்கப்ப பள்ளிகளில்காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

ஆலோசனை கூட்டம்

முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் வருகிற கல்வியாண்டில் விரிவுபடுத்தப்பட உள்ளதை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது.

கலெக்டர் வளர்மதி பேசியதாவது:-

620 பள்ளிகளில்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 620 தொடக்கப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் வருகிற கல்வி ஆண்டு முதல் செயல்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக் குழு பெண்கள், குழந்தைகளுக்கு காலை உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுதல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள்.

திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட ஊராட்சி, பேரூராட்சி அளவில் ஒரு முதன்மை குழு அமைக்கப்பட வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவர், பேரூராட்சி தலைவர், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பு, அலுவலகப் பிரதிநிதி ஆகியோரை உறுப்பினராக கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். பள்ளியின் தலைமை ஆசிரியர் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.

கண்காணிக்க வேண்டும்

காலை உணவுத்திட்டத்திற்கான அரிசி, பருப்பு, எண்ணெய், சிறுதானிய வகைகள், கருப்பட்டி போன்ற உணவு பொருட்களை நன்கொடைகளாக பெறுவதற்கு ஊராட்சி மன்ற தலைவரால் தானிய வங்கி அமைக்கப்பட வேண்டும். இதற்கென்று ரொக்க நன்கொடைகள் அனுமதிக்கப்படாது. தற்பொழுது 13 வகையான உணவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் 5 வகையான உணவுகள் வழங்கப்படும். இத்திட்டத்தை மாவட்ட, வட்டார, ஊராட்சி அளவிலான குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைத்து பள்ளிகளிலும் சமையல் கூடங்கள் தயார் செய்யும் பணிகளையும், சீரமைக்கும் பணிகளையும் வருகிற 25-ந் தேதிக்குள் முடித்திட வேண்டும். 10 குழந்தைகளுக்கு மேல் உள்ள பள்ளிகளில் கட்டாயம் சமையல் கூடம் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள். பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story