அரசு பள்ளியில் காலை உணவு திட்டத்தை தினமும் ஆய்வு செய்ய வேண்டும்-அதிகாரிகளுக்கு, கண்காணிப்பாளர் வெங்கடேஷ் உத்தரவு
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, மாவட்ட கண்காண
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, மாவட்ட கண்காணிப்பாளர் வெங்கடேஷ் உத்தரவுட்டுள்ளார்.
ஆய்வு கூட்டம்
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டி.என்.வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, நகராட்சிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் ஆகிய துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட கண்காணிப்பு அதிகாரி வெங்கடேஷ் கூறியதாவது:-
வளர்ச்சி பணிகள்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாதம் ஒருமுறை நேரிடையாக தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டத்திற்கு சென்று, அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை நேரிடையாக கள ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டு உள்ளார். அதனடிப்படையில் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை ஆய்வு செய்து வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.
மேலும் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களின் வருகைப் பட்டியல் மற்றும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு, கண்காணிக்க வேண்டும்.
கண்காணிக்க வேண்டும்
அதேபோல் எண்ணும் எழுத்தும் திட்டம் சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் மண்டல அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மழைக்காலங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்புள்ளதால், சுகாதாரத்துறை மூலம் தேவையான காய்ச்சல் முகாம்களை நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இதேபோல் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமானதாக உள்ளதா என்பதை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.