பள்ளிகளில் காலை உணவு திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கே.எஸ்.அழகிரி பாராட்டு
பள்ளிகளில் காலை உணவு திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கே.எஸ்.அழகிரி பாராட்டு.
சென்னை,
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எந்த சொத்தும் இல்லாதவர்களுக்கு கல்வி என்ற சொத்தை அனைவருக்கும் இலவசமாக வழங்கி மாணவர்களின் வருகையை அதிகரிப்பதற்காக கல்வி நிலையங்களில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் காமராஜர். அத்தகைய புரட்சிக்கு வித்திட்ட தமிழகத்தில், மற்றுமொரு புரட்சி 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கியிருப்பதை மனதார வரவேற்கிறேன்.
இதன்மூலம் மாணவர்கள் குறிப்பாக, மலைப்பகுதிகளில் இருக்கிற மாணவர்கள் பெருமளவில் பயனடைகிற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த முயற்சி விரிவுபடுத்தப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இத்தகைய அரிய முயற்சிகளை மிகுந்த நிதி நெருக்கடியான சூழலிலும் அறிமுகப்படுத்தியிருக்கிற தமிழக முதல்-அமைச்சரை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.