காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்
தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிகளில் 21 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வேலை நாட்களிலும் சத்தான காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் மதுரையில் தொடங்கி வைத்தார்.
அதன்தொடர்ச்சியாக தஞ்சை கூட்டுறவு காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் இந்த திட்டத்தை அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறினார்.
21 பள்ளிகள்
தஞ்சை மாநகராட்சிகுட்பட்ட பகுதியில் 8 தொடக்கப்பள்ளியில் படிக்கும் 375 மாணவ, மாணவிகளுக்கும், கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 13 தொடக்கப்பள்ளியில் படிக்கும் 1,067 மாணவ, மாணவிகளுக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 21 மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள 1,442 மாணவ, மாணவிகள் இந்த திட்டம் மூலம் பயன் பெறுகின்றனர்.
திங்கட்கிழமை சேமியா உப்புமா, காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை கோதுமை ரவா, காய்கறி கிச்சடி, புதன்கிழமை வெண்பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமா, காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை ரவா காய்கறி கிச்சடி, சேமியா கேசரி வழங்கப்படுகிறது.
ஆய்வு
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க் கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், முதன்மைக்கல்வி அலுவலர் சிவக்குமார், நேர்முக உதவியாளர் (சத்துணவு) அன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தாரேஸ்அகமது நேரில் ஆய்வு செய்து உணவை சாப்பிட்டு பார்த்தார். மேலும் உணவு தயார் செய்யப்படும் உணவு கூடத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.