'பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்' - கல்வி வளர்ச்சியின் அடுத்த மைல் கல்


பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் - கல்வி வளர்ச்சியின் அடுத்த மைல் கல்
x

ரசுப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களை உளவியல்ரீதியாக மேம்படுத்தவும், அவர்களின் கற்றல்திறனை அதிகரிக்கவும் பயன்படும் இந்தத் திட்டம், வரும் கல்வியாண்டு முதல் மாநிலத்தின் அனைத்து தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இதை ஒரு சலுகையாக அல்லாமல் தமிழக அரசின் கடமையாகச் செயல்படுத்துவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் நீதிக்கட்சி அரசானது சென்னையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கியது. பின்னர், காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது மாநிலம் முழுவதும் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். அதன் தொடர்ச்சியாக மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டது.

ஆனாலும் கணிசமான குழந்தைகள் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவது கண்டறியப்பட்டது. இப்படி பசியோடு பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு முதலில் உணவளித்த பின்னர், வகுப்பறைக்கு அனுப்பும் உன்னதமான திட்டத்தைத் தொடங்கிவைத்தது, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு.

இதுகுறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசுகையில், "தானிய உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் தமிழகத்தில், பசியோடு யாரும் இருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில், அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கவும், அவர்களின் கல்வித் திறனை அதிகரிக்கவும், இடையில் படிப்பைக் கைவிடுவதைத் தவிர்க்கவும், பள்ளிக்கு மாணவர்களின் வருகையை அதிகரிக்கவும் 'பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு' வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது." என்று கூறினார்.

மேலும், " இந்த- 'பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு' திட்டத்தின்படி, மாநகராட்சி, நகராட்சி, தொலைதூர கிராமங்களில் உள்ள 1 முதல் 5 வகுப்புகள் பயிலும் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி வேலைநாள்களில், காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். இது இலவசம் அல்ல. வருங்காலத் தமிழகத்தில் அறிவான, ஆரோக்கியமான மாணவர்களை உருவாக்க அரசு செய்யும் முதலீடு." என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் என்பது அமெரிக்காவிலும் பல ஐரோப்பிய நாடுகளிலும், வேறு பல நாடுகளிலும் பல ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள், உணவுக்கு வழியில்லாமல் படிக்கும் வயதிலேயே கூலி வேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலையை முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாற்றியுள்ளது.

பள்ளிக்கு அனுப்புவதால் பிள்ளைகளுக்கு இரண்டு வேளை உணவு கிடைக்கிறது என்ற நம்பிக்கையில், பள்ளிக்கு அனுப்புகிறார்கள். இதனால் பள்ளிக்கு மணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. பள்ளிக்குச் சென்றால் கல்வியும் கிடைக்கும்; உணவும் கிடைக்கும் என்கிற நம்பிக்கை பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதனால் கூலி வேலைக்குச் செல்லும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிப்பதால் எதிர்காலத்தில் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல முடியும்.

இந்த பெருமைகள் அனைத்தும் முதலமைச்சர் ஸ்டாலினின் 'பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம்' மூலமே சாத்தியப்பட்டது.

இது, தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியின் அடுத்த மைல் கல்லாக அமைந்துள்ளது.