கோவில் உண்டியல்களை உடைத்து கொள்ளை; அண்ணன்-தம்பி கைது
செம்பனார்கோவில் அருகே கோவில் உண்டியல்களை உடைத்து கொள்ளை; அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டார்
திருக்கடையூர்:
செம்பனார்கோவில் அருகே கோவில் உண்டியல்களை உடைத்து கொள்ளை அடித்த அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.
உண்டியல்களை உடைத்து கொள்ளை
மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீப காலமாக கோவில்களில் உள்ள உண்டியல்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்படுவது தொடர்ந்து நடந்தது.
இந்த நிலையில் செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோவில், மணக்குடி பொறையான் கோவிலில் உள்ள உண்டியல்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
அண்ணன்- தம்பி கைது
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. கொள்ளை நடந்த கோவில்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடந்தது.
இதில் கீழப்பெரும்பள்ளத்தை சேர்ந்த ஜெயராமனின் மகன்கள் வடிவேலு (24), பாபு (23) ஆகிய இருவரும் சேர்ந்து கோவில்களில் இருந்த உண்டியல்களை உடைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
10-க்கும் மேற்பட்ட...
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அண்ணனும், தம்பியும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கோவில்களில் உண்டியல்களை உடைத்து கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.