மளிகைக்கடையை உடைத்து ரூ.40 ஆயிரம் திருட்டு
ஓட்டப்பிடாரம் அருகே மளிகைக்கடையை உடைத்து ரூ.40 ஆயிரத்தை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே மளிகைக்கடையை உடைத்து ரூ.40 ஆயிரத்தை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
மளிகைக்கடை
ஓட்டப்பிடாரம் ரைஸ்மில் காலனி சேர்ந்த சண்முகவேல் மகன் பாரதி (வயது 36).இவர் முப்புலிவெட்டி ஊருக்குத் தெற்கே மளிகை கடை வைத்துள்ளார். மளிகை கடையை நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்துள்ளது. மேலும் கடையின் உள்ளே இருந்த பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.40 ஆயிரம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இச்சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் பாரதி ஓட்டப்பிடாரம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். ஓட்டப்பிடாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையில் போலீசார் சம்பவ கடைக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிக் கொண்டு தப்பி செல்வது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்து ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடையில் பணத்தை திருடி கொண்டு தப்பி சென்ற 3 மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.