சேலம் அருகே அரியானூரில்வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சேலம் அருகே அரியானூரில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பனமரத்துப்பட்டி,
வக்கீல்
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள அரியானூர் வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர் இனோஜ் சேவியர் (வயது 39). சென்னையில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஆர்த்தி மரியா (38). இவர் அரியானூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இவர்கள் கடந்த 12-ந் தேதி மாலை கோவையில் உள்ள தங்களது தோட்டத்தில் பொங்கல் விழாவை கொண்டாடுவதற்காக வீட்டை பூட்டி விட்டு அங்கு சென்றனர். அங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடி விட்டு நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தனர்.
அவர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இனோஜ் சேவியர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது
தொடர் கொள்ளை
இதுகுறித்து இனோஜ் சேவியர் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி, ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இந்த கொள்ளை நடந்த வீட்டின் அருகில் வசிக்கும் டாக்டர் அருண்பாலாஜியின் வீட்டுக்குள் கடந்த 13-ந் தேதி இரவு புகுந்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த அவரது மனைவியான டாக்டர் அஸ்வதி மற்றும் அவரது இரு மகன்களை மிரட்டி அங்கிருந்த 8 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றனர்.
எனவே அன்றைய தினம் இரவே பூட்டி இருந்த வக்கீல் இனோஜ் சேவியர் வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் 5 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு, பிறகு டாக்டர் அஸ்வதி வீட்டில் கொள்ளையடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்துள்ள 2 வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அரியானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.