கோவில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
கோவில் பூட்டை உடைத்து நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
துறையூர்:
அம்மனின் திருமாங்கல்யம்
துறையூரை அடுத்த செங்காட்டுப்பட்டியில் காந்திபுரம் தெருவில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலின் பூசாரியாக செங்காட்டுப்பட்டியை சேர்ந்த ரத்தினம் (வயது 60) உள்ளார். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கோவிலின் கதவை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் அவர் கோவிலை திறந்து பூஜை செய்வதற்காக வந்தார்.
அப்போது கோவிலின் முன்புற கதவின் பூட்டு மற்றும் கருவறைக் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததோடு, முன்புறம் இருந்த உண்டியலும் காணாமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் கோவிலுக்குள் அம்மன் கழுத்தில் கிடந்த 2½ பவுன் திருமாங்கல்யத்தையும் காணவில்லை.
போலீசார் விசாரணை
இதையடுத்து திருமாங்கல்யம் மற்றும் உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்த பூசாரி ரத்தினம், இதுகுறித்து துறையூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அந்த கோவிலில் இருந்த உண்டியலை, மர்ம நபர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள வயல்காட்டிற்கு தூக்கிச்சென்று, அதில் இருந்த பணத்தை திருடிவிட்டு உண்டியலை தூக்கி வீசிவிட்டு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள கோவிலில் நகை, பணம் திருட்டுப்போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.