கோவில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
குழித்துறை அருகே கோவில் பூட்டை உடைத்து பணம்-பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
களியக்காவிளை:
குழித்துறை அருகே கோவில் பூட்டை உடைத்து பணம்-பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
பகவதி அம்மன் கோவில்
குழித்துறை அருகே குறுமத்தூர் பகுதியில் செம்மருதங்காடு பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு தினசரி காலை, மாலை வேளைகளில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதே போல் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்த பின்பு நடையை அடைத்துவிட்டு பூசாரி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
நேற்று காலையில் கோவிலுக்கு பூசாரி வந்த போது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. கோவில் உள்ளே சென்று பார்த்த போது அலுவலகத்தின் உள்ளே இருந்த 12 வெண்கல குத்துவிளக்குகள், மணி ஒன்று மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மாயமாகி இருந்தது. இரவில் யாரோ மர்மஆசாமிகள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
போலீஸ் தேடுகிறது
இதுபற்றி கோவில் நிர்வாகிகளுக்கு பூசாரி தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் களியக்காவிளை போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்து, விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமிகளை தேடி வருகிறார்கள்.