பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்; பெண் சர்வேயர் கைது
வாடிப்பட்டி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
லஞ்சம்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சேந்தமங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 37). 5-வது வார்டு உறுப்பினர். இவர் தனது மனைவி பெயரில் வாங்கிய 60 சென்ட் நிலத்திற்கும், பாகப்பிரிவினை பங்கில் கிடைத்த 20 செண்ட் நிலத்திற்கும் பட்டா உட்பிரிவு செய்வதற்கு மனு செய்திருந்தார். அதன் பின் நிலத்தை அளவீடு செய்தால்தான் பட்டா வழங்கப்படும் என்று தெரியவந்ததால் பாலமேடு பிர்கா சர்வேயர் சந்திரா (45) என்பவரிடம் தனது நிலத்திற்கு பட்டா வாங்க நிலத்தை அளக்கும் படி கேட்டுக் கொண்டார்.
அதற்கு அவர் தலா ரூ.5 ஆயிரம் வீதம் 2 பட்டா உட்பிரிவுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக செந்தில் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
பெண் அதிகாரி கைது
லஞ்ச ஊழல் தடுப்பு துறை துணை சூப்பரண்டு சத்தியசீலன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் பிரபு, அன்பு ரோஸ், ஜெயராஜா குமரகுரு சூரியகலா, பாரதிப்ரியா, வைஸ் சிலின் ஆகியோர் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை செந்திலிடம் கொடுத்து அனுப்பினர். இதை அய்யங்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே வந்து வாங்கி கொள்வதாக சந்திரா கூறியுள்ளார். அதன்படி நேற்று பணத்துடன் செந்தில் நின்றார். அங்கு வந்த சந்திரா செந்திலிடமிருந்து ரூ.10 ஆயிரத்தை வாங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சந்திராவை கையும், களவுமாக பிடித்து அவரை கைது செய்து மதுரை லஞ்ச ஒழிப்பு துறை தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.