திருஉத்தரகோசமங்கையில் பட்டா மாறுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம்; கிராம நிர்வாக அலுவலர் கைது
பட்டா மாறுதல் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
பட்டா மாறுதல் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
ரூ.3 ஆயிரம் லஞ்சம்
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை யாதவர் தெரு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). விவசாயி. இவருக்கும், இவரின் அண்ணனுக்கும் கூட்டாக உள்ள ஒரு நிலத்தை பிரித்து பட்டா மாறுதல் செய்து வழங்கக்கோரி, திருஉத்தரகோசமங்கை கிராம நிர்வாக அலுவலகத்தில் ரமேஷ் மனு அளித்தார்.
பட்டா மாறுதல் செய்ய ரூ.7 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கிராம நிர்வாக அலுவலரான நயினார்கோவில் வல்லம் பகுதியை சேர்ந்த தமிழ்பாண்டியன்(33) கேட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் ரூ.3 ஆயிரம் கொடுக்குமாறு கிராம நிர்வாக அலுவலர் கூறினாராம். இதுகுறித்து ரமேஷ், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
தீவிர விசாரணை
போலீசாரின் ஆலோசனையின்பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.3 ஆயிரம் லஞ்ச பணத்தை ரமேஷிடம் கொடுத்து அனுப்பினர். இந்த பணத்தை அவர் நேற்று காலை திருஉத்தர கோசமங்கை கிராம நிர்வாக அலுவலகத்தில் தமிழ்பாண்டியனிடம் கொடுத்தார். அதனை வாங்கிய போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், ராஜேஸ்வரி உள்ளிட்ட போலீசார் அதிரடியாக உள்ளே சென்று தமிழ்பாண்டியனை பிடித்தனர்.
இதுதொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தி பின்னர் அவரை கைது செய்தனர். இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.