மின் இணைப்புக்கு லஞ்சம்: முன்னாள் வணிக ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை
மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய முன்னாள் வணிக ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு உத்தரவிட்டது
உத்தமபாளையம் கல்லூரி சாலையை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். விவசாயி. இவர் கோம்பை பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் மின் இணைப்பு பெறுவதற்கு உத்தமபாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு விண்ணப்பித்தார். அப்போது அங்கு மின்வாரிய வணிக ஆய்வாளராக பணியாற்றிய குபேந்திரன் (வயது 53) மின் இணைப்பு வழங்குவதற்கு கள ஆய்வு செய்து மதிப்பீட்டு அறிக்கை கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். அதற்கு காசி விஸ்வநாதன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். இதனால் ரூ.1,000 கழித்து ரூ.4 ஆயிரம் லஞ்சம் கொடுக்குமாறு குபேந்திரன் கேட்டார்.
பின்னர் அவர் பணம் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து சென்றார். இதுகுறித்து தேனி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் காசி விஸ்வநாதன் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அதை குபேந்திரனிடம் அவர் கொடுத்தார். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு தேனி மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இறுதி விசாரணையை தொடர்ந்து நீதிபதி கோபிநாதன் நேற்று தீர்ப்பளித்தார். லஞ்சம் வாங்கிய குபேந்திரனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.