செங்கல் சூளை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தா.பழூர் அருகே செங்கல் சூளை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல் சூளை தொழிலாளி
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி புது காலனி தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 58), செங்கல் சூளை தொழிலாளி. இவர் அண்ணங்காரம்பேட்டை கிராமத்தை சேர்ந்த புகழேந்தி மனைவி சத்யா என்பவரிடம் அவரது செங்கல் சூளையில் கல் அறுக்கும் வேலைக்கு வருவதாக கூறி முன் பணமாக ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்தை கடந்த 2019-ம் ஆண்டு பெற்றதாக கூறப்படுகிறது.
சத்யா செங்கல் சூளையில் வேலைக்கு வருமாறு பலமுறை அழைத்தும் அவர் வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. வேலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை முன்பணமாக பெற்ற தொகையை திரும்ப தந்து விடுங்கள் என்று பலமுறை கேட்டுள்ளார். ஆனால் ராமலிங்கம் வேலைக்கும் செல்லாமலும், முன்பணத்தையும் திரும்ப தராமலும் இருந்து வந்துள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசில் சத்யா புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த ராமலிங்கம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தா.பழூர் இன்ஸ்பெக்டர் கதிரவன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.