மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கொத்தனார் பலி; 2 பேர் படுகாயம்
மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கொத்தனார் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலூர்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள மேலராங்கியத்தை சேர்ந்தவர் துரை (வயது 32). கொத்தனார். மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள குறிச்சிப்பட்டியில் தங்கியிருந்து கூலி தொழிலாளர்களுடன் கட்டிடம் கட்டும் பணி செய்து வந்தார்.
சமையலுக்கு தேவையான பொருட்களை உரங்கான்பட்டியில் வாங்கிவிட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு குறிச்சிப்பட்டிக்கு திரும்பி வந்துள்ளார். இவருடன் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மேலராங்கியத்தை சேர்ந்த வேலு மற்றும் கீழராங்கியத்தை சேர்ந்த உதயகுமார் ஆகிய இருவரும் அதே மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் உட்கார்ந்து வந்துள்ளனர். ஆலம்பட்டி அருகே வந்தபோது நாய் ஒன்று ரோட்டின் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 3 பேரும் படுகாயமடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி துரை இறந்தார்.
இந்த விபத்து குறித்து கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.