பாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிப்பு
பந்தலூர் அருகேபாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பந்தலூர்
பந்தலூர் தாலுகா கூவமூலா அருகே உள்ள செட்டிவயல் ஆதிவாசி காலனியில் நூற்றுகணக்கான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் அவசர தேவை, அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூவமூலா அல்லது உப்பட்டி, பந்தலூர் பஜாருக்கு தான் வரவேண்டும். இந்த நிலையில் செட்டியல் ஆதிவாசி காலனியில் இருந்து கூவமூலாவிற்கு செல்லும் சாலையின் குறுக்கே நீரோடை செல்கின்றது. இந்த நீரோடை கடக்க நெல்லியாளம் நகராட்சி சார்பில் சிறிய பாலம் அமைக்கப்பட்டது.
இந்த சிறிய பாலம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் இந்த பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் செட்டிவயல் ஆதிவாசி காலனி-கூவமூலா இடையேயான சிறிய பாலம் திடீரென இடிந்து விழுந்தது.
இதனால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.