தேனியில் கட்டிய 2 மாதத்தில் சேதமடைந்த பாலம்
தேனியில் கட்டிய 2 மாதத்திலேயே புதிய பாலம் சேதமடைந்தது.
தேனி அல்லிநகரம் நகராட்சி 31-வது வார்டுக்கு உட்பட்ட சோலைமலை அய்யனார் கோவில் தெருவுக்கும், திட்டச்சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் சாக்கடை கால்வாய் மீது அமைக்கப்பட்ட பாலம் சேதம் அடைந்து காணப்பட்டது. இதனால், அங்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்கு புதிதாக பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த பாலம் 2 மாதங்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை. இந்த தெருவில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் ஏற்றி வரும் லாரி மற்றும் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களுக்கு தாக்குப்பிடிக்காமல் பாலம் சேதம் அடைந்துள்ளது.
எனவே பாலம் தரமாக கட்டப்பட்டுள்ளதா? என பாலத்தின் உறுதித்தன்மையை சோதனை செய்யவும், இதனை சீரமைக்கவும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் அதே பகுதியில் கட்டப்படும் புதிய சாக்கடை கால்வாய் பாலங்களையும் தரமாக கட்ட வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.