தொடர்மழையால் சேதமடைந்த தரைப்பாலம்
கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையினால் தற்காலிக தரைப்பாலம் சேதம் அடைந்தது. இதனால் மலைக்கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
தற்காலிக தரைப்பாலம்
கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது பள்ளங்கி அடிசரை என்ற மலைக்கிராமம். இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும்.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமத்துக்கு செல்ல வேண்டுமானால் பூம்பாறை ஆற்றை கடந்து செல்ல வேண்டும். மழைக்காலத்தில் இந்த ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். இதனால் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த ஆற்றை கடந்து செல்லும் வகையில், மலைக்கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தங்களது சொந்த பணத்தில் ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக தரைப்பாலம் ஒன்றை அமைத்தனர். சுமார் 6 மாதங்களுக்கு முன்பு அந்த தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
மலைக்கிராம மக்கள் அவதி
இந்தநிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில், கடந்த சில தினங்களாக இரவுநேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டித்தீர்த்தது.
இதன் எதிரொலியாக, பூம்பாறை ஆற்றின் குறுக்கே மலைக்கிராம மக்கள் அமைத்திருந்த தற்காலிக தரைப்பாலம் சேதம் அடைந்தது. இதனால் அடிசரை குடியிருப்பு பகுதிக்கு வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தங்களது பகுதியில் விளைந்த பொருட்களை வெளியூர்களுக்கு அவர்களால் வாகனங்களில் எடுத்து செல்ல முடியவில்லை. தலைச்சுமையாக பொருட்களை கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குதிரைகள் மூலம்...
ஒரு சிலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கவும், வெளியூர்களுக்கு பொருட்களை கொண்டு செல்லவும் குதிரைகளை பயன்படுத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, மிகவும் அபாயகரமான முறையில் உள்ள சேதமடைந்த தரைப்பாலம் வழியாக பள்ளி மாணவ-மாணவிகள் ஆற்றை கடக்கின்றனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் தரைப்பாலம் முற்றிலும் அடித்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மலைக்கிராம மக்களின் நலன் கருதி சேதமடைந்த தரைப்பாலத்துக்கு பதிலாக, ஆற்றின் குறுக்கே நிரந்தரமாக பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கான முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபடுமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் காத்திருக்கின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால், தரைப்பாலம் முழுவதும் சேதமடைந்து சீரமைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சேதமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.