அந்தரத்தில் உயர்மட்ட மேம்பால பணி
கிருஷ்ணகிரியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி அந்தரத்தில் விடப்பட்டுள்ளது. இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கிருஷ்ணகிரியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி அந்தரத்தில் விடப்பட்டுள்ளது. இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தேசிய நெடுஞ்சாலைகள்
தமிழக-கர்நாடகா-ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம். இங்கு காஷ்மீர்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை, பெங்களூரு-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட மொத்தம் 5 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.
இந்த 5 தேசிய நெடுஞ்சாலைகளும் சந்திக்கும் இடமாக கிருஷ்ணகிரியில் 6 வழிச்சாலைகளும், 4 வழிச்சாலைகளும் அமைந்துள்ளன. கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாகவும், சேலம், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் சாலைகள் 4 வழிச்சாலைகளாகவும் உள்ளன. இதன் காரணமாக தென்னிந்தியாவிலேயே அதிக அளவில் வாகன போக்குவரத்து கொண்ட நகரமாக கிருஷ்ணகிரி விளங்குகிறது.
மேம்பாலங்கள்
குறிப்பாக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. கிருஷ்ணகிரி நகரையொட்டி அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் என்பது நகரில் தீராத பிரச்சினையாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் அமையும் போதே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி நகரில் ராயக்கோட்டை பிரிவு சாலையில் மேம்பாலமும், சென்னை சாலை பிரியும் இடத்தில் ஆவின் மேம்பாலமும் கட்டப்பட்டது.
பிறகு நகரில் இருந்த போக்குவரத்து நெரிசல்களாலும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆஞ்சநேயர் கோவில் அருகில் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டது. இதே போல சென்னை சாலையில் டி.சி.ஆர். மருத்துவமனை அருகிலும், திருவண்ணாமலை பிரிவு சாலையிலும், குப்பம் பிரிவு சாலையிலும் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
பணிகளில் தொய்வு
இந்த நிலையில் சென்னை சாலையில் கிருஷ்ணகிரி நகருக்கு பிரியும் இடத்தில் தொன்னையன் கொட்டாய் என்னும் இடத்தில் அடிக்கடி சாலை விபத்துகள் நடந்தன. இதனால் உயிர் இழப்புகளும் ஏற்பட்டன. இதனால் சென்னை சாலையில் கிருஷ்ணகிரி நகருக்குள் வரக்கூடிய இடத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள், அரசியல் கட்சிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர்.
மேலும் பல்வேறு போராட்டங்களும் நடந்தன. இதன் காரணமாக தற்போது சென்னை சாலையில் கிருஷ்ணகிரி நகர் சாலை சந்திக்கும் இடத்தில் தொன்னையன் கொட்டாய் பகுதியில் மேம்பாலம் கட்டப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த மேம்பால பணிகள் வேகமாக நடந்து வந்தது. தற்போது மேம்பாலம் அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டு ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக வார விடுமுறை நாட்களில் நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.
வாகன ஓட்டிகள் சிரமம்
இந்த மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக சென்னை சாலையில் இருந்து கிருஷ்ணகிரி நகருக்குள் வருபவர்கள், சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றி திருவண்ணாமலை சாலை பிரியும் இடத்தில் உள்ள மேம்பாலம் வழியாக நகருக்குள் வருகிறார்கள்.
இன்னும் சிலர் ஆபத்தை உணராமல் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தின் வழியாக சென்று வருகிறார்கள். கிருஷ்ணகிரி நகர பொதுமக்களுக்கு பயனாக அமைய கூடிய இந்த உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி அந்தரத்தில் விடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கிடப்பில் போடப்பட்ட பாலப்பணியை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி நகர பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.